Thursday, February 23, 2012

MLAவின் மின்சார தந்திரம் !!

   தனது கணவரின் ரூம் கதவை பல முறை தட்டியபின்னும், உள்ளிருந்து ஒரு அசைவும் வராததால், பதட்டமடைந்த மீனாட்சி, உறங்கிகொண்டிருந்த தனது மகனை எழுப்பி அழைத்து வந்தாள். மகன், சற்றுநேரம் முயற்சித்துபார்துவிட்டு, கதவை உடைக்க முடிவு செய்தான். வேலை ஆட்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே தூக்கில் தொங்கிகொண்டிருந்தார் MLA  ராஜரத்தினம்.
      செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஊரே ஒன்று கூடி அவர் வீட்டு வாசலை முற்றுகை இட்டது ..கடந்த 30 வருஷமா அவர்தான் அந்த ஊரோட MLA, சுயேட்சை MLA  ! எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஊருக்கு அவர் தான் MLA ! ஆனா அவர், ஒரு தடவ கூட ஓட்டு கேட்டு பிரசாரத்துக்கு போனதே இல்ல. வேட்புமனு தாக்கல் பண்ணிட்டு வீட்டுக்கு போனார்னா, வெற்றி சேதி கேட்ட பிறகுதான் வீட்ட விட்டு வெளிய வருவார். அடுத்த 5 வருஷமும், வீடு வீடா போய், மக்கள் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார். சில ஊர் மக்களுக்கு, அவங்க ஊர் MLA யாருன்னே தெரியாது. ஆனா இந்த MLA க்கு, அந்த ஊர் மக்கள் எல்லாரையும் தெரியும்.  
         அவுருக்கு சொத்துன்னு இருக்கறது, அவரோட வீடும், கொஞ்சம்  நிலமும் தான். சட்டசபை கூடும் நாட்கள் தவிர, மீதி  நாட்கள் எல்லாம், அந்த ஊர விட்டு எங்கயும் போனது கிடையாது. தன்னோட டூ வீலர்லதான், ஊர் முழுக்க வலம் வருவார். கண்ணில் படும் குறைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டு உடனே தீர்க்க வழி காணுவார். அந்த ஊர்ல தண்ணி பிரச்சன கிடையாது, போகுவரத்து பிரச்சன கிடையாது, குண்டும் குழியுமா  ஒரு  ரோட பாக்க முடியாது.
         படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி, சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தந்தார். ஒரு காலத்தில் கோடீஸ்வர ஜாமீன், இன்றோ அனைத்தையும் பொது மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல். வீட்டில் இவருக்கு எல்லாமே  இவரது மனைவிதான். ஒரே மகன் விவசாயம் படித்துவிட்டு, நிலங்களை கவனித்து கொள்கிறான். இப்படி எல்லாமே சிறப்பா அமைந்த இவரோட வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமதான் போய் கிட்டிருந்தது.
        ஆனா, கடந்த ஒரு வருஷாமா இவர பாதித்த ஒரே விஷயம் மின்வெட்டு. தினம் நடக்கும் பத்து மணி நேர மின்வெட்டால் அந்த ஊர் மக்கள் படும் துன்பத்தை இவரால் தாங்க முடியவில்லை. பல சிறு தொழில்கள் நடத்த முடியாம போய் ஒவ்வொன்னா மூடும் நிலையில் இருந்தது. இவர் சிறுவனாக இருந்த பொழுது இவரின் நண்பர்கள் பலர் தெரு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்து வந்தனர். ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ அந்த வெளிச்சம் கூட கிட்டாத நிலை. இன்னும் ஒரு மாதத்தில் பரீட்சை வேறு வருகிறதென்ற கவலை, இவரை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது.
      இதனால் மிகவும் வருந்தியவருக்கு , ஒரு வாரம் முன்பு இவர் கேள்விப்பட்ட செய்தி, இவரை மிகவும் சிந்திக்க வைத்தது. இரண்டு நாட்களாக, தனிமையில் கிடந்து யோசித்தவர்க்கு, இந்த முடிவுதான்  சரியென பட்டது !!
       வீட்டின் நடு கூடத்தில், கிடத்தியிருந்த இவரின் உடலுக்கு ஊரே ஓன்று கூடி இறுதி அஞ்சலி செலுத்திகொண்டிருந்தது. அருகே, அழுது அழுது சிவந்த கண்களுடன் இவரது மனைவி மீனாட்சி. அந்த கண்களில், அந்த சோகத்தையும் மீறி ஒரு பெருமிதம். மேலே, மின்விசிறி  சுழன்றுகொண்டிருக்க தனது கணவரை பெருமை போங்க பார்த்த மீனாட்சிக்கு, நேற்று தன் கணவர் கூறியது மனதில் ஓடியது..
  "நான் செத்தாதான், இந்த ஊருக்கு கொஞ்ச நாளாவது கரண்ட்டு வரும் மீனாட்சி"

செய்தி: சங்கரன்கோவில் இடைதேர்தலை முன்னிட்டு, அங்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்க ரகசிய உத்தரவு !!

இதே கதை, வேறு கோணத்தில் !

ஏலே, முருகா, பயங்கரமா வேர்க்குது பார், Fan அ போடுறா ..
ஐய்யா, கரண்ட் இல்ல ஐய்யா.
ஆஹா, கரண்ட் இல்லையா, சரி, அருவாள எடு, நம்ம ஊர் MLAவ போடு.
ஐய்யா ?
போடுராங்கரேன் !!
ஐய்யா, MLAவ, போட்டாச்சு ஐய்யா !!
இப்ப போடுறா, Fan ஸ்விட்ச !
போட்டச்சுயா !!
சுத்துதா ?
சுத்துதுயா !!
Moral of the story : ஒரு ஊருக்கே கரண்ட் வருதுன்னா, ஒரு MLAவ போடறதுல தப்பேஇல்ல !!


கும்பிபாகம் !!

5  நிமிஷம் கரண்ட் கட் பண்ணா தப்பா ?
தப்பேஇல்ல !
அஞ்சு அஞ்சு நிமிஷமா, அம்பத்தஞ்சு நாள் கட் பண்ணா ?
தப்பு மாதிரி தாங்க தெரியுது !
அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம், 5 மணிநேரம்,  555  நாள் கட்பண்ணா ?
ரொம்ப தப்புங்க !!
இதுக்கு கருட புராணத்துல என்ன தண்டன தெரியுமா ? பத்த வைடா அடுப்ப, ஊத்துடா என்னைய, வறுடா இவன !!

அந்த பொன்னும் ஈரோடு தான் !!!


 

செம காமடி பாஸ், "நேத்திக்கு காலைல 6  மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு, என்ன பண்ணேன், எந்திருச்சு பல் வெளக்கிட்டு, டீ கடைக்கு போய்,டீயும், வடையும், சாப்டுட்டு,பேப்பர் வாங்கிட்டு வந்து, ஒரு பக்கம் விடாம படிச்சேன், அப்பறம் எட்டு
மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு, சரின்னு நானும்
ரூம்மெட்டும் கெளம்பி போய், நல்லா சுட சுட பொங்கலும் பூரியும் 
சாப்டு வந்து, அப்பிடியே, TV  பாத்துட்டே ஊர் நாயம் பேசிட்டு இருந்தோம்..சரியா 11  மணிக்கு மறுபடியும் போய், ஒரு டீ அடிச்சுட்டு வந்தேன்..அப்பறம் அப்பிடியே கொஞ்சநேரம் நெட்ல மேஞ்சிட்டு, 1 மணிக்கு போய் ஆந்திரா மெஸ்ல full கட்டு கட்டினேன்..வீட்டுக்கு வந்து சுகமா ஒரு தூக்கம் போட்டேன்.. சாயங்காலம் எந்திருச்சு மறுபடியும் ஒரு டீ, ரெண்டு போண்டா, அப்பறம் அப்டியே TV  பாத்துட்டு, நைட் 10 மணிக்கு போய் சில பல பரோட்டாவும் சப்பாத்தியும் உள்ள தள்ளினேன்"..

சரி, "அதுக்கு என்னடா இப்ப" ?

"அதான் நேத்து அந்த தின்னு தின்னது, வயத்துக்குள்ள கடமுட கடமுடன்னு ரயில் ஓடற 
மாதிரி இருக்கு, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்".

இவுருதாங்க, நம்ம நண்பர் "காரி". "வயத்த கலக்குது, இதோ வந்துடறேன்" 
அப்பிடீன்னு அவசரமா சொல்லிட்டு ஓட வேண்டிய நேரத்துல கூட,
இப்படித்தான் ஒன்ற பக்கத்துக்கு பேசுவார்.கேரள பத்பநாப சுவாமி கோயிலின் சில அறை
கதவுகள் பல்லாண்டுகளாக திறக்கவேயில்லைன்னு சொல்றாங்க,
ஆனா இவரோட வாய் கதவுகள் கடந்த 25 வருஷமா மூடினதே கிடையாது..

இவர் பிறந்தது, வளந்தது, படிச்சது, எல்லாம் ஈரோடு, இப்ப வேலை பாக்கறது சென்னைல.நம்மில் சிலருக்கு நாட்டு பற்று இருக்கும், சிலருக்கு மாநில பற்று இருக்கும், சிலருக்கு மொழி பற்று இருக்கும், சிலருக்கு இனப்பற்று இருக்கும். ஆனா நம்ம காரிக்கு ஊர் பற்று ரொம்ப ஜாஸ்தி. இவர பொருத்தவரைக்கும், தமிழ்நாட்லயே, இல்ல இந்த இந்தியாவிலயே, ஏன் இந்த உலகத்துலயே, அணைத்தது ஜீவா ராசிகளும் வசிக்க
சிறந்த ஊர் ஈரோடுதான்.பெட்டிகடைல கடலைபருப்பி 
சாபிடும்போதும் சரி, சரவண பவன்ல தோச சாப்பிடும்போது சரி
பொன்னுசாமில பிரியாணி   சாபிடும்போதும் சரி இவர் என்ன சொல்வார்ணா, "என்னதான் சொல்லுங்க எங்க ஊர்ல வர்ற டேஸ்ட் வேற எங்கயும் வராது"
                       எங்க ஆபீஸ்ல கிட்டத்தட்ட 400  பேர் வேலை செய்றோம். ஒவ்வொருத்தருக்கும் அவங்க டீம்ல கூட வேலை செய்ற 10,20  பேர தெரியும், வெளி டீம்ல ஒரு 10,20  பேர்கூட பழக்கம் இருக்கும். ஆனா இவருக்கு ஆபீஸ்ல வேலை செய்யற 400 பேரையும் தெரியும். டெய்லி வந்து கம்ப்யுடர ஆண் பண்ணிட்டு கிளிம்பினார்ணா, 400  பேர்கிட்டயும்  போய்   அட்டன்டன்ஸ் போட்டுட்டு திரும்ப ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சுதான் சீட்டுக்கு வருவார்.
                     புதுசா யாரவது ஈரோட்டுக்காரர் வேலைக்கு சேர்ந்துட்ட போதும், எல்லார்ட்டயும் போய், "மச்சி, இவர் எங்க ஊர்டா",, "மாப்ள , நம்ம ஊர்காரண்டா" அப்டீன்னு introduce  பண்ணிவைப்பார்,. அது மாதிரி புதுசா சேர்ற பொண்ண இவர் friendship புடிக்கற ஸ்டைலே தனி. நேர அந்த பொண்ணு இருக்கற சீட்டுக்கு பக்கத்து சீட்  ஆள்கிட்டபோய் ஒரு முக்கா மணிநேரம் மொக்க போடுவார், அப்டியே 5 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அந்த பொண்ணுகிட்ட என்ன  Reaction அப்டீன்னு பாப்பார்.
லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டா போதும் அடுத்த ஒருமணி நேரத்துல அந்த பொண்ணோட cafeteriaல காபி சாப்டுகிட்டு இருப்பார்.

                      ஆபீஸ்ல, யார்காவது எந்த பொண்ண பத்தியாவது டீடைல் வேணும்னா இவர்ட்ட தான் கேப்பாங்க. இவரும் கொஞ்ச நேரத்துல விசாரிச்சிட்டு வந்துட்டு, "அவுளுக்கு ஏற்கனேவே வேற ஆள் இருக்கு மச்சி"  அப்டீன்னு சொல்வார் . நெஜமாவே அவுளுக்கு வேற ஆள் இருக்கா, இல்ல இவர்தான் அவங்கள வேற யாரும் கரெக்ட் பண்ணிடகூடாதுன்ற ideala  இப்படி சொல்றாரா அப்டீன்னு ஒரு டவுட் ரொம்ப நாலா எனக்கு இருக்கு.

                     இவர்க்கு எப்ப எது நடந்தாலும் அது காமெடி தான். இவர் எப்ப என்ன பேச வந்தாலும் முதல்ல ஸ்டார்ட் பண்ற வார்த்த, "செம காமெடி மச்சி".
"டேய் மச்சி நேத்து செம காமெடி ஆயிடுச்சி, என்னாச்சு பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடிச்சி, செம காமெடி போ" ..."டேய் இந்த செம காமேடிய கேளேன், பஸ் ஸ்டாப்ல முக்கா மன்நேரமா வெயிட் பண்றேன் பஸ்ஸே வரல, செம காமடி, அப்பறம் 100 ரூவா தெண்டமா ஆட்டோக்கு குடுத்து வந்தேன்" இதுமாதிரி நடக்கற விஷயம் எல்லாம் கூட இவருக்கு காமெடி தான்.
                          ஒரு நாள் எனக்கு இன்சூரன்ஸ் சம்பந்தமா ஒரு டீடைல் தேவபட்டுது. சரி, இருக்கவே இருக்கார்  நம்ம காரி, அப்படீன்னு அவர்ட்ட  போய் அந்த விஷயத்த சொன்னேன்.
"பாஸ், இதென்ன பாஸ் சப்ப மேட்டரு, Just Dial  கூப்புட்டு கேட்டா சொல்லிட போறாங்க"
                "oh , சரிடா மச்சி நான் கேட்டுக்கரேன்னு சொல்லிட்டு" phone பண்ண மொபைல் எடுத்தேன். "பாஸ் phone குடுங்க நான் கேட்டு சொல்றேன்" அப்டின்னு சொல்லி என்கிடேந்து மொபைல புடுங்கி டயல் பண்ணினார். அப்டியே பேசிட்டே  நாங்க இருந்த இடத்த விட்டு தள்ளி போய்ட்டார்.
                  ஒரு 25  நிமிஷம் கழிச்சு "பாஸ், செம காமெடி பாஸ்" அப்படீன்னு கத்திகிட்ட ஓடி வந்தார்.
                      "மச்சி எதுவா இருந்தாலும் பதட்ட படாம அமைதியா சொல்லு "  என்றேன்.
               "பாஸ், நீங்க வேற, phone  பண்ணினனா, ஒரு பொண்ணு எடுத்துச்சி பாஸ், செம காமெடி போங்க"
                  "இதுல என்னடா காமெடி, இன்சூரன்ஸ் பத்தி என்ன சொன்னங்க"
              "பாஸ், அதெல்லாம் விடுங்க, இந்த காமடிய கேளுங்க"
             " என்னடா " ?
                "அந்த பொன்னும் ஈரோடு தான்,பாஸ் " !!!

Saturday, February 4, 2012

பிரியாணி, அன்லிமிடட் தான ??

                "யாகவராயினும் நாகாக்க"  என்பது வள்ளுவன் வாக்கு. யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும், பிறர் மனம் புண்படும்படியோ, அவமானபடுத்தும் விதமாகவோ கடும்சொர்களை பயன்படுத்தகூடாது என்கிறான் வள்ளுவன்.
                என்னை பொறுத்தவரை நாவடக்கம் என்பது பேசும்போது மட்டுமல்ல சாப்பிடும்போதும் தேவை . ஆம், எப்பவுமே நம் வயிற்றுக்கு என்ன தேவையோ அதை சாப்பிட வேண்டுமே தவிர, நாவிற்கு தேவையானதை சாப்பிட கூடாது. சரியான அளவில், சரியான நேரத்தில், சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தால் என்றுமே ஆரோக்யத்துடனும், இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக பெற முடியும்.
                  சுத்தி வளைச்சது போதும், நான் நேரா விஷயத்துக்கு வரேன், நம்ம பிரெண்ட் "சொக்கு" இருக்கானே, சரியான சாப்பாட்டு ராமன். எப்ப, எந்த ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும், இவன் கேட்கும் மொத கேள்வி, "மீல்ஸ் லிமிட்டா, அன்லிமிட்டா" ? சர்வர், "லிமிடட் மீல்ஸ் தான் சார்" என்று சொன்னால்  உடனே வரும் அடுத்த கேள்வி, "எக்ஸ்ட்ரா மீல்ஸ் எவ்ளோ" ?. அட ஏங்க, ஒரு தடவ தலப்பாக்கட்டு போயிட்டு அங்கயும்," ஏம்பா, பிரயாணி அன்லிமிட்டெட் தான" என்று கேட்டு வைத்தான். சர்வர் கடுப்புடன் முறைக்க இவன் சங்கடமேபடாம நம்மை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்.
              சில ஐடம் டேஸ்ட் நல்லா இருந்துட்டா, அதையே ரெண்டு தடவ ஆர்டர் பண்ணி சாப்பிடுவான், காலை வேலையில் ரெண்டு பொங்கல், ரெண்டு செட் பூரி சாப்பிட்டுவிட்டு, சர்வர் "பில் கொன்டுவரட்டுமா" என்று  கேட்கும் போது, வயற்றை தடவிக்கொண்டே ஏதோ டயட்டில் இருப்பவன் போல், ஒரே ஒரு தோசை என்று சொல்லி, சர்வர் முகத்தில் தெரியும் அதிர்ச்சியை ரசிப்பான்.
        ஒரு நாள் இவனிடம்  எனக்கு ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது. அது சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்தோம். வேலைக்கு மத்தியில், மச்சி ஒரு டீ, சாப்பிடலாமா? என்றான். 
          மணி மூன்ற தாண்டா ஆகுது, இப்பதாண்டா சாப்டோம் அதுக்குள்ளே ஏன்டா?
         இல்ல மச்சி, "மதியம் சாப்பிட்டது சரியாய் செரிக்கள, அதான்"..
         சரி என்று அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று, ரெண்டு டீ என்று நான் சொல்ல, மச்சி எனக்கு காபி என்றான். சரி, ஒரு டீ ஒரு காபி என்று சொல்ல வந்தால்,   மச்சி "இங்கே வேண்டாம், அதோ அங்க போனா, நல்ல பில்ட்டர் காபி சாப்பிடலாம்" என்று எதிரில் இருந்த உயர்தர சைவ ஹோட்டலை காட்டினான். ஆஹா, பத்து ரூவாய்ள, முடிச்சிடலாம்னு பார்த்தா அங்க காபி 20  30  ரூவா சொல்வானே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சரி என்றேன்.
                 கடைக்குள் போனதும், மச்சி, "காபிக்கு முன்னாடி ஒரு பஜ்ஜி" என்று சொல்லிவிட்டு என் தலையசைபிற்கு காத்திராமல், அவனே ஒரு ப்ளேட் பஜ்ஜி ஒரு ப்ளேட் போண்டா என்று ஆர்டர் செய்துவிட்டு என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான். மனதில் கருவிக்கொண்டே நானும் காத்திருக்க சர்வர் வந்து நீட்டிய ப்ளேட்டில் திருப்பதி லட்டு சைசில் 4 போண்டா , கல்லு கட்டி வளர்த்த பொடலங்கா சைசில் 4  பஜ்ஜி. அதிர்ச்சியடைந்த நான், "ஏம்பா ஒரு ப்லேட்டுணா 2 தானே" என்று கேட்க, "இல்ல சார் இங்க நாளுதான் வரும்" என்றான். (புது டெக்னிக்கா இருக்கே ? உக்காந்து யோசிப்பாங்களோ).. "ஏன்டா, எதாவது ஒன்ன கான்செல் பண்ணிடலாமா" என்றால் சொக்குவோ, "இருக்கட்டும் மச்சி சாப்டரலாம்" என்று அதே  அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.
       " இவ்ளோ பெருசா? எப்டி போட்டுருப்பாங்க !!"  என்று நினைத்துகொண்டே நான் கஷ்டப்பட்டு ஒரு பஜ்ஜியையும் ஒரு போண்டாவையும் சாப்டு முடிக்கறதுக்குள்ள, சொக்கு, மிச்சம் இருந்த 3  பஜ்ஜி, 3  போண்டாவா உள்ள தள்ளிட்டு, "தம்பி, காபி இன்னும் வரல" என்று சர்வரிடம் கடுகடுத்தான்..
                    எப்பவும், யார்கூட சாப்ட போனாலும், முடியும் நேரத்தில், "வேற எதாவது வேணுமா" என்று கேட்கும் நான், இவனிடம் அது மாதிரி கேட்டு பல தடவ அனுபவபட்டிருப்பதால், அவன் காபி உருஞ்சும் போதே சர்வரிடம் பில் என்று சிக்னல் செய்தேன். வந்த பில்லோ 175  ரூவாய், நான் அதிர்ச்சியில் சொக்குவ  முறைக்க அவன் முகத்தில் அதே அசட்டு சிரிப்பு. சரி, தலைவிதியேன்னு    பர்சை திறந்தாள், அதில்  இருந்தது வெறும் 90  ரூவாய். அட பாவி, "போன மாசம் வீட்டுக்கு FRIDGE  வாங்கும்போது கூட புல்லா cash  கொடுத்து தாண்டா வாங்கினேன், கேவலம் ஒரு காபிக்கு போய் கார்டு தேக்க வச்சிட்டியேடா"  என்று கத்திகொண்டே செட்டில் செய்தேன். 

      வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்யும்போது, "ஏன்டா நாயே, இவ்ளோ திங்கரியே, உனக்கெல்லாம் பேதியே போகாதா" ? என்றேன்.
      "இல்ல மச்சி, தலைலேர்ந்து கால் வரைக்கும் எல்லா நோயும் வந்து போயிருக்கு மச்சி, ஆனா பேதி மட்டும் எனக்கு போனதே இல்லடா" என்றான் பெருமையாக.  
     நிஜமாவாடா ? ...
     நிசமா மச்சி.

"நாளைக்கு போகும், சத்தியமா போகுண்டா" .......